
முதல்வருடன் இஸ்லாமிய அமைப்பினர் சந்திப்பு
கோவை: கோவையில் இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மனு அளித்தனர்.
தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. அவற்றை கையாள்வதற்கு என்று சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில் கோவையில் இஸ்லாமிய அமைப்பினர் செவ்வாயன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மனு அளித்தனர்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி கோவை சென்றுள்ளார். அப்போது அவரை பலவேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாகச் சந்தித்தனர்.
அப்போது தமிழகத்தில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தங்களுக்குள்ள கருத்துக்களை மனுவாக அளித்தனர். அவர்களிடம் முதலவர் அரசின் தரப்பை எடுத்துரைத்தார்.
முதல்வரை சந்தித்த பின் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொது செயலாளர் ஜப்பார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ,'என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை அமல்படுத்துவது இஸ்லாமியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை முதல்வரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார். கோரிக்கைகளை படித்து பார்த்த முதல்வர் , சிறுபான்மை மக்களை ஒரு போதும் இந்த அரசு பாதிக்க விடாது என்று தெரிவித்துள்ளதாக கூறிய அவர்,பல பேர் பலவிதமாக இது குறித்து பேசி வருகின்றனர் எனவும், உண்மை நிலை மெதுவாக தெரியவரும் எனவும் முதல்வர் தெளிவுபடுத்தினார்.
மேலும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் ஜப்பார் தெரிவித்தார்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...