அரியலூர்: தென்னை சாகுபடி செய்யும் விவசாயி கள் முன்னெச்சரிக்கைக்காக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
அரியலூர் மாவட்டத்தில் 330 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் வரப்போரங்களிலும் மற்றும் வயலைச் சுற்றியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெருமளவில் தோப்பாகச் சாகுபடி செய்யப்படவில்லை.
அண்மைக்காலமாக தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது.
வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20-30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படர்ந்து காணப்படும்.
வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையானது பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த: மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி அகலம் 1 1/2 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களைக் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமாகவும் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.
வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தைப் பெருமளவு குறைக்கிறது.
என்கார்ஸியா ஒட்டுண்ணிகளானது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
கிரைசோபெர்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.
இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம்
மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் உயிரினங்கள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளைக் கண்டிப்பாக தவிர்த்து நன்மை செய்யும் உயிரினங்கள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். எனவே, தென்னை விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்திப் பயன் பெறலாம் என்று அரியலூர் வேளாண் இணை இயக்குநர்(பொ)ஆர். பழனிசாமி தெரிவித்தார்.