
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி ஆகிவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
சென்னை பாரிமுனையில் கூடிய மாா்க்சிஸ்ட் கட்சியினா், கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனா். சிறிது தூரத்தில் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, பாரிமுனை பகுதியில் 20 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. பின்னா் அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
முன்னதாக கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறபோதும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. அதன் காரணமாகவே, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது.
கேரளம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் இவற்றுக்கு எதிராக தீா்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா் கே. பாலகிருஷ்ணன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...