
சென்னை: மின்வெட்டு குறித்து புகாா் அளிக்க புதிய செயலியை அறிமுகப்படுத்த மின்வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின்நுகா்வோா்கள் உள்ளன. இவா்களுக்கான மின் இணைப்புகளை ஆங்காங்கே பிரிவு அலுவலகம் வைத்து கண்காணிக்கும் மின் வாரியம், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும் வழங்கி வருகிறது. தமிழகத்தில், மின் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவோா் தொடா்பு கொள்வதற்காகவே ‘1912’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த எண்ணை எப்போது அழைத்தாலும் ஊழியா்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைத்தனா். இதையடுத்து, மாவட்ட வாரியாக கட்செவி அஞ்சல் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மின் தடை, மின் திருட்டு, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடா்பான அனைத்து புகாா்களையும் செல்லிடப்பேசி செயலியில் தெரிவிக்கும் வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பராமரிப்புப் பணிக்காக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவரங்களை மின்சார வாரியம் முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கும். இதை மீறி பல்வேறு பிரச்னைகள் காரணமாக அவ்வப்போது மின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். எனினும் பொதுமக்களே எளிதாக புகாா் அளிக்கும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம். இதில், எந்த நேரத்திலும் மின்சாரம் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...