சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன்

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன்

திருச்சி: குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுதில்லி வன்முறை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் மக்களவைத் தலைவர் அனுமதி அளிப்பார் என நம்புகிறோம். தில்லி வன்முறை சம்பவத்தால் உலக அரங்கில் இந்திய தேசம் தலைகுனியும் நிலைக்கு வந்துவிட்டது.

மதத்தின் பெயரால் திட்டமிட்ட குரூரமான வன்முறை அரங்கேறியிருக்கிறது. குஜராத் வன்முறை சம்பவம்போல இஸ்லாமியர்களுக்கு எதிராக வடகிழக்கு தில்லி பகுதியில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக அமைச்சர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பிய பிறகும், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை.

வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக பெங்களூரில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் தேசம் காப்போம் பேரணி புதன்கிழமை நடைபெறுகிறது. இதன்தொடர்ச்சியாக, ஆந்திர மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து பேரணி நடத்தவுள்ளோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கட்சி பாகுபாடின்றி திமுக பொதுச் செயலர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து இறுதிசடங்கில் அதிமுக-வினர் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. இத்தகைய அரசியல் நாகரீகம் தமிழகத்தில் வளர வேண்டும்.

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் அதிமுக பின்னடவை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் பாஜக-வுடன் கூட்டணியை கைவிட வேண்டும். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு அதிமுக உடன்பட்டுவிடக் கூடாது. 

ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில் அவரது அரசியல் நடவடிக்கை தொடர்பாக கருத்து கூற முடியாது. ரயில்வே, எல்ஐசி, விமானப்போக்குவரத்து என பொதுத்துறை நிறுவனங்களை தனியமார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது.கரோனா வைரஸ் குறித்து மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பிராந்திய மொழிகளிலும் விளம்பரங்கள் வெளியிட வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு கோரிக்கை வைக்கவில்லை. கோரிக்கையே இல்லாதபோது அதிமுக-வுடன், திமுக-வை ஒப்பீடு செய்யக் கூடாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com