ரஜினியின் தர்மசங்கடங்கள்

இன்னும் அதிகாரபூர்வமாகப் பெயர் அறிவித்து அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும், அநேகமாகத் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படத் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.
ரஜினியின் தர்மசங்கடங்கள்

இன்னும் அதிகாரபூர்வமாகப் பெயர் அறிவித்து அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும், அநேகமாகத் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படத் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த். அவரது சந்திப்புகளும், அறிக்கைகளும், பேட்டிகளும் தலைப்புச் செய்திகளாகி, ஏனைய நிகழ்வுகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்கு, ஒட்டுமொத்தத் தமிழகமே ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்காகக் காத்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.
 திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு புதிய கட்சி உருவாக வேண்டும் என்கிற மக்களின் பரவலான எதிர்பார்ப்பு இப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில்தான், அவர் வியாழக்கிழமை முழுமையான பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதில் வியப்பில்லை.
 எம்ஜிஆருக்குப் பிறகு இந்த அளவிலான மக்கள் செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இருந்ததில்லை என்பதை, ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் சென்றபோது தமிழகம் உணர்ந்தது. அவருக்காக மண்சோறு தின்றவர்கள், அலகு குத்திக் கொண்டு காவடி எடுத்தவர்கள், மொட்டை அடித்துக் கொண்டவர்கள், பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் என்று அவரது ரசிகர்களும் பொதுமக்களும் அடைந்த துயரத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா உடல்நிலைக் குறைவின்போது காணப்பட்ட சூழலுடன்தான் ஒப்பிட முடியும்.
 அரசியல் கட்சி தொடங்கும் முடிவை அறிவித்துவிட்டிருக்கும் ரஜினிகாந்தின் இன்றைய நிலைமையை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு கட்சி தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்ட எம்ஜிஆரின் நிலைமையுடன் ஒப்பிடலாம். 1972-இல் திமுகவின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கணக்குக் கேட்டார் என்பதால் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கு எப்படித் தயங்கினாரோ, அதே விதத்திலான தயக்கம் ரஜினிகாந்துக்கும் இருப்பதை, 1996 முதல் அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
 தனது அரசியல் எண்ணத்தை ரஜினிகாந்த் முதன்முதலில் வெளிப்படுத்திய நிகழ்வு, "ப. சிதம்பரம் ஒரு பார்வை' புத்தக வெளியீட்டு விழாவில்தான். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட நடிகர்கள் ரஜினியும், கமலும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர் கருணாநிதி. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் "என் வழி தனி வழி' என்று தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தை முதன்முதலில் வெளிப்படுத்தினார் ரஜினி.
 தனிக்கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, ஆட்சியமைத்தால் முதல்வராகி நிர்வாகத்தை எப்படி வழிநடத்துவது என எம்ஜிஆர் 1972-இல் தயங்கினாரோ, அதேபோன்றதொரு தயக்கம் 2020-இல் ரஜினிகாந்துக்கும் இருந்தால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால், எம்ஜிஆரைப்போல அரசியல் கட்சி தொடங்க வேண்டிய திடீர் சூழல் ரஜினிகாந்துக்கு ஏற்பட்டுவிடவில்லை.
 1996 முதல், கடந்த கால் நூற்றாண்டு காலமாக, தனது அரசியல் பயணத்தைத் திட்டமிட ரஜினிக்கு நிறையவே கால அவகாசம் இருந்திருக்கிறது. அவரும் தொடர்ந்து அரசியல் தலைவர்களையும் ரசிகர்களையும் சந்தித்து இது குறித்து ஆலோசனையும் செய்து வந்திருக்கிறார்.
 தனிப்பட்ட செல்வாக்கு என்று சொன்னால், இன்றைய நிலையில் தமிழகத்தில் ரஜினிகாந்தை விஞ்சிய செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் தலைவருக்கும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்தத் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே வாக்குகளாக மாறிவிடுமா, தனிக்கட்சி தொடங்கி நடத்த அமைப்பு ரீதியான அடித்தளம் இருக்கிறதா என்கிற கேள்விகள் கேட்போரும் உண்டு. அமைப்பு ரீதியான அடித்தளம் இல்லாமலேயே தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில் ஆட்சியைப் பிடித்த வரலாறு என்டி ராமாராவின் தெலுங்கு தேசத்துக்கும், கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் உண்டு.
 அமைப்பு ரீதியாக வலுவான அஸ்திவாரத்துடன் இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளின் பணபலத்தை எதிர்கொள்வதற்குத் தனக்குப் பக்க பலமாக மத்திய அரசு இருக்க வேண்டும் என்பதால்தான் ரஜினிகாந்த் பாஜகவின் நட்புறவை நாடியிருக்க வேண்டும். ரஜினியால் பாஜக ஆதாயம் அடைவதைப்போல, பாஜகவுடனான உறவால் ரஜினிகாந்தும், அவர் தொடங்க இருக்கும் கட்சியும் பயனடையுமா என்கிற கேள்விதான் அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் இப்போதைய பிரச்னையாக இருக்கக் கூடும்.
 தமிழகத்தைப் பொருத்தவரை, பாஜகவுக்கு என்று அமைப்பு ரீதியான கட்டமைப்பு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கட்சி என்கிற தோற்றத்தை சமூக ஊடகங்கள் வலுவாக உருவாக்கி வைத்திருக்கின்றன. இந்த நிலையில், தனது கட்சிக்கு வலு சேர்ப்பதற்கு பதிலாக பாஜக தேவையில்லாத சுமையாக மட்டுமல்லாமல், தனது செல்வாக்குச் சரிவுக்கும் காரணமாகிவிடுமோ என்கிற அச்சம் ரஜினிகாந்துக்கு ஏற்பட்டிருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.
 "ரஜினிகாந்த் மட்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தல் களத்தில் இறங்கினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும், பட்டியலினத்தவர்களும் அவருக்குப் பின்னால் அணி திரள்வார்கள். திமுக, அதிமுக கூடாரங்கள் காலியாகிவிடும்'' என்கிற சில அரசியல் கணிப்புகள் புறந்தள்ளக் கூடியவை அல்ல. அது ரஜினிகாந்துக்கும் தெரியும். 2014, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா செய்ததுபோல, பாஜகவை ஒதுக்கி நிறுத்தினால், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள் மட்டுமல்ல, ஹிந்துத்துவ ஆதரவாளர்களும்கூட ஆன்மிக அரசியலை முன்வைக்கும் ரஜினிகாந்தின் ஆதரவாளர்களாகி விடுவார்கள் என்பதை அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை.
 பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு என்று பாஜக தலைமையுடன் மிக நெருக்கமாக இருக்கிறார் ரஜினிகாந்த். அரசியலில் தற்கொலை முயற்சியாக இருக்கும் என்று தெரிந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள அவர் தயங்கினால் அதில் நியாயம் இருக்கிறது. அதுதான் ரஜினியின் முதலாவது தர்மசங்கடம்.
 கடுமையான அழுத்தத்தையும் மீறி 2011, 2014, 2016 தேர்தல்களில் பாஜகவைத் தவிர்த்துவிட்டார் ஜெயலலிதா. அதேபோல, அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட ரஜினிகாந்த் தயங்குவதுதான் அவரது தர்மசங்கடத்துக்குக் காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 அதே நேரத்தில், தனது அரசியல் முடிவிலிருந்து ரஜினிகாந்தால் இனி பின்வாங்கவும் முடியாது. அப்படிப் பின்வாங்கினால், அது அவரது திரையுலக வாழ்க்கையை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் மிகப் பெரிய சோதனையாக மாறிவிடக்கூடும். இதுதான் அவர் எதிர்கொள்ளும் இரண்டாவது தர்மசங்கடம்.
 ரஜினிகாந்தின் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் அவரது அரசியல் கட்சி அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பதவிக்கோ, புகழுக்கோ ஆசைப்படாமல் ரஜினிகாந்தை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்கிற ஒரே எதிர்பார்ப்பில் இருப்பவர்கள் அவர்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய சக்தியாக ரஜினிகாந்த் இருப்பார் என்கிற நம்பிக்கையில் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குக் காணப்படுகிறது.
 2017 டிசம்பர் 31-ஆம் தேதி, "தனிக்கட்சி தொடங்கி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன்' என்றும், "234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி' என்றும் ரஜினிகாந்த் அறிவித்ததும், எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில், "அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எம்ஜிஆர் ஆட்சி தருவேன்' என்று அறிவித்ததும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் எதிர்பார்ப்பு அளப்பரியது.
 தனிக்கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொண்டர்கள் அவரது வியாழக்கிழமை அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள். 1972-இல் எம்ஜிஆர் கட்சி தொடங்காவிட்டால் தீ குளிப்பதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் எப்படி ரசிகர்களும் தொண்டர்களும் தயாராக இருந்தார்களோ அதே நிலைப்பாட்டில் இப்போது ரஜினிகாந்தின் தொண்டர்களும் இருக்கிறார்கள்.
 எம்ஜிஆரைப் போலவே, ரஜினிகாந்தும் தனது ரசிகர்களுக்காகக் கட்சி தொடங்கியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இதுதான் ரஜினிகாந்த் எதிர்கொள்ளும் பாஜகவைவிடப் பெரிய தர்மசங்கடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com