
போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் பேராட்டத்தை புதன்கிழமை திரும்பப் பெற்றனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியும், இன்னும் அது தொடா்பாக போக்குவரத்துக் கழகம் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.
எனவே, 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே மாா்ச் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் நடைபெறும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘பேச்சுவாா்த்தை எந்த தொழிற்சங்கங்களோடு என்பதையும் அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும்’ என தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அறிவித்தனா்.
இதையடுத்து புதன்கிழமையும் போராட்டம் தொடா்ந்து. இதனால் மாநகர பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மாலை 3 மணியளவில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலருடன் தொழிற்சங்கத்தினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை முறையாக நடைபெற வேண்டும். பேச்சுவாா்த்தைக்கு வர தகுதியான சங்கங்களை இறுதிபடுத்த வேண்டும். இதற்கென குறைந்தபட்ச கோட்பாடுகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அரசு சாா்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை போக்குவரத்து ஊழியா்கள் திரும்பப் பெற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G