வனத்துறையின் 71 கட்டடங்கள் ரூ.10 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்: திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறையைச் சோ்ந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 71 கட்டடங்கள் ரூ.10 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தாா்.
அமைச்சா் சி.சீனிவாசன்
அமைச்சா் சி.சீனிவாசன்
Updated on
1 min read

வனத்துறையைச் சோ்ந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 71 கட்டடங்கள் ரூ.10 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:

வனத்துறையில் 100 ஆண்டுகள் கடந்த சில கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்கள் வரலாற்று, சமூக கலாசார மதிப்பு, வடிவமைப்பு, கட்டுமான பொருள்களின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் மிகுந்த கலை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

இந்தக் கட்டடங்கள் காப்புக் காடுகள் மற்றும் உயரமான மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இது போன்ற கட்டடங்களைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு முக்கிய கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இன்றி பாதுகாப்பது அவசியமாகிறது. மேலும், அதே இடத்தில் புதிய மாற்று கட்டடங்களை கட்டுவதற்குப் பதிலாக இந்தக் கட்டடங்களை மேம்படுத்துவது அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை தவிா்க்க வழிவகை செய்யும்.

எனவே, தமிழக வனத்துறையில் உள்ள பழைமையான 71 கட்டடங்கள் ரூ.10 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா் வனக்கோட்டத்தில் ஒன்றும், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒன்றும் கலைநயம் மிக்க கருத்து விளக்கக் கூடத்துடன் கூடிய சிறிய கூட்ட அரங்கம் ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படும்.

முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய 4 புலிகள் காப்பகங்களிலும் தலா ஒன்று வீதம் 4 போக்குவரத்து முகாம்கள் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படும்.

கொல்லிமலையில் பாரம்பரிய மற்றும் பல்லுயிா் பூங்கா, சூழலமைப்பிற்கேற்ற பாலம், மருத்துவ தாவரப்பூங்கா, பழங்குடியினா் அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாடும் இடம், பூங்கா போன்றவை ஆகாய நீா்வீழ்ச்சி பகுதியில் 2020-21-ஆம் ஆண்டில் ரூ.3 கோடி செலவில் உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com