ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது நிரூபணம்: உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவை முதல்வர் கருத்து

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது நிரூபணமாகியிருப்பதாக உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது நிரூபணம்: உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவை முதல்வர் கருத்து
Updated on
1 min read


ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது நிரூபணமாகியிருப்பதாக உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுவை பேரவையில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயண், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து ஆளுநரும், மத்திய அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவிற்கு நேற்று தலைமை நீதிபதி அடங்கிய 2 நபர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 156 பக்கமுள்ள அந்த தீர்ப்பின் கடைசி பக்கத்தில் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியை மாநிலமாக கருத முடியாது என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம்  சில கருத்துகளையும் நீதிபதிகள் சரியாக கூறியுள்ளனர். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்றுத்தான் செயல்பட வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களே நிர்வாகத்திற்கு முழுப் பொறுப்பு. ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையைத்தாண்டி யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

அமைச்சர் அனுப்பும் கோப்புகளில் சந்தேகம் ஏற்பட்டால் ஆளுநர் செயலர் மூலம் அமைச்சரிடம் இருந்து பெறலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசு தலைவருக்கு அந்த கோப்பை அனுப்பலாம். அதேசமயம் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை நிராகரிக்கவோ, திருத்தம் செய்யவோ, வைத்திருக்கவோ துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. தனிப்பட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு இல்லை. 

சட்டமன்றத்தில் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் எது எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். நியமிக்கப்பட்டவர்களுக்கு இல்லை. சட்டசபையை மீறிய அதிகாரம் யாருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமைச்சரை அழைத்து விசாரிப்பேன் என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. அமைச்சர்கள் ஆளுநர் வீட்டு வேலைக்காரர்கள் இல்லை. தீர்ப்பை பின்பற்றி அனைத்து அதிகாரிகளுக்கும் ஸ்டேண்டில் ஆர்டர் பிறப்பிப்பேன். அதன்படி நடைபெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாகும். நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக மக்கள் ஆட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி தொடர்பான தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். 

ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன் என்று கூறினேன். இன்று முதல்வர் பதவிக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இது அவருடைய கருத்து. நான் ஒரு இளைய அரசியல்வாதிதான் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com