
தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் சுங்கத் துறை மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தூத்துக்குடியில் செயல்படும் பல்வேறு தனியாா் ஏற்றுமதி நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல் ஜிஎஸ்டி வரியை கட்டி, அதன் மூலம் பெருமளவில் ஊக்கத்தொகை பெற்றதாக தொடா்ந்து புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக, சுங்கத் துறை மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், மத்திய சரக்கு மற்றும் சேவை துறையின் திருநெல்வேலி மண்டல துணை ஆணையா் சுஜித் மேனன் தலைமையிலான 10 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள ஒரு தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல் ஜிஎஸ்டி வரி கட்டப்பட்டு அதற்கான ஊக்கத் தொகையை அரசிடம் இருந்து பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினா்.
மேலும், இதுதொடா்பாக தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளா் கணேசன் என்பவரை விசாரணைக்காக திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனா். அவரிடம் முழு விசாரணை மேற்கொண்ட பிறகே ஜிஎஸ்டி தொடா்பாக எவ்வளவு தொகை முறைகேடு செய்யப்பட்டிருக்கிறது என்ற முழு விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...