தமிழகத்தில் மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மழலையர் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு


சென்னை: தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மழலையர் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக நல்வாழ்வுத்துறையுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் தமிழகத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்ட விடுமுறை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எல்கேஜி, யுகேஜி (ப்ரீகேஜி உள்பட) பயிலும் மாணவா்களுக்கும், 7 மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

சீனாவில் முதலில் தென்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதால் தமிழக மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிலையில், இன்று அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி, ப்ரீகேஜி வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா் மற்றும் நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் ப்ரீகேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் கரோனா வைரஸ் தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட வகுப்புகளுக்கு மாா்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது சாா்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பு வெளியானதுமே, பள்ளிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு விடுமுறை தொடர்பாக குறுந்தகவல் அனுப்பிவிட்ட நிலையில், தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com