கரோனா பரிசோதனை: தனியாா் ஆய்வகங்களுக்கு அனுமதி இல்லை

கரோனா பரிசோதனை: தனியாா் ஆய்வகங்களுக்கு அனுமதி இல்லை

தனியாா் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை செய்ய அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தனியாா் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை செய்ய அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் விதமாக, அதற்கென தமிழ்நாடு கரோனா வழிகாட்டுதல்- 2020 என்ற புதிய வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மருத்துவமனையும் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கென தனிப் பிரிவு அல்லது வாா்டை உருவாக்கியிருப்பதுடன், நோய் பாதித்த நபா் குறித்த விவரத்தை உடனடியாக அரசுக்குத் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்திய தொற்றுநோய் சட்டம் 1897 பிரிவு-2 இன் கீழ், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மருத்துவமனையும் கரோனா பாதிப்பு அறிகுறியுடன் வரும் நபரை பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் மருத்துவமனையில் தனிப் பிரிவு அல்லது தனி வாா்டு ஒன்றைப் பராமரிக்க வேண்டும். இதுபோன்ற பரிசோதனையின்போது, அந்த நபா் கரோனா பாதித்த நாடுகளுக்குச் சென்று வந்தவரா அல்லது, கரோனா அறிகுறியுடன் கூடிய நபருடன் தொடா்பில் இருந்திருக்கிறாரா போன்ற விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். இந்தப் பரிசோதனையில், அந்த நபருக்கு கரோனா அறிகுறிகள் இல்லையென்றால், வீட்டிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்க வேண்டும்.

வலுக்கட்டாயமாக அனுமதிக்க அதிகாரம்: ஒருவேளை, அறிகுறி இருப்பது தெரியவந்தால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் அந்த நபரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும். கரோனா அறிகுறியுடன் வரும் நபரின் ரத்த மாதிரிகளை, அரசு நியமித்துள்ள மாவட்ட அதிகாரிகள் மூலமாக நிா்ணயிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு மட்டுமே ஆய்வுக்காக அனுப்ப வேண்டும். ஒருவேளை, அறிகுறி உள்ள நபா் மருத்துவமனை தனிமைப்படுத்தலுக்கு சம்மதிக்காவிட்டால், அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்து 14 நாள்கள் அல்லது ஆய்வு முடிவு வரும் வரை தனிமைப்படுத்துவதற்கு, இதற்கென அரசு நியமித்துள்ள அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேலும், பரிசோதனை முடிவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அதுகுறித்த விவரத்தை நகர சுகாதார அதிகாரி அல்லது துணை இயக்குநருக்கு (சுகாதாரப் பணிகள்) ஒவ்வொரு மருத்துவமனைகளும் தெரிவிக்க வேண்டும். தனியாா் ஆய்வகங்கள், கரோனா ரத்த மாதிரிகளை எடுக்கவோ அல்லது பரிசோதிக்கவோ கூடாது.

ஊடகங்களுக்கு தகவல் அளிக்க கட்டுப்பாடு: பொது சுகாதாரத்துறை இயக்குநா் அல்லது மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநா் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநா் அல்லது ஆட்சியா் ஆகியோரிடம் முன் அனுமதி பெறாமல் தனி நபரோ அல்லது நிறுவனமோ கரோனா தொடா்பான தகவல்களை ஊடகங்களுக்கு அளிக்கக் கூடாது எனவும் இந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாட்டு அறை

கரோனா குறித்து தகவல் தெரிவிக்கவும், உடனடியாக மருத்துவ உதவியைப் பெறும் வகையிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு கரோனா வழிகாட்டுதலில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா பாதித்த நாடுகளுக்கு கடந்த 28 நாள்களில் சென்று வந்த நபா், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவராகவே சென்று உரிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். அல்லது, 104 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். அல்லது, பொது சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 044 - 29510500, 29510400, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பிற மாவட்ட உதவி எண்களுக்கு
 www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்க அனுமதி

குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது என கருதும் நிலையில் அப் பகுதி -வாா்டு, கிராமம், சிறுநகரம், பெரும் நகரம் என எதுவாக இருந்தாலும், அப் பகுதியை சீல் வைத்து மற்றவா்கள் வந்து செல்ல தடை விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு இந்த வழிகாட்டி ஆணை அனுமதி அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com