தூய்மைக் காவலர்கள் வேதனை கட்டுப்படியாகாத சம்பளம்

தினமும் ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூய்மைக் காவலர்கள் வேதனை கட்டுப்படியாகாத சம்பளம்

கோவை: தினமும் ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2014 -15 ஆம் நிதியாண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்கீழ் ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுகளைச் சேகரித்து அதனை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 குடியிருப்புகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் சேர்த்து 1,608 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
ஆரம்பத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தூய்மைக் காவலர்களுக்கு 100 நாள்கள் மட்டும் வேலை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் புதிய ஆள்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ. 200 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 100 நாள்கள் மட்டுமே வேலை அளிப்பதால் தூய்மைக் காவலர் பணிக்கு பலர் வர மறுத்தனர். இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் ஒன்றிரண்டு தூய்மைக் காவலர்களை வைத்து கழிவுகளைச் சேகரித்து வந்தனர்.  
இந்நிலையில் 2018 - 19 ஆம் நிதியாண்டில் தூய்மைக் காவலர்களை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நியமிக்காமல் அந்தந்த ஊராட்சிகள் சார்பில் நியமனம் செய்து, மாநில அரசு நிதியில் இருந்து சம்பளம் வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இவர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நாளொன்றுக்கு ரூ. 100 வீதம் மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 26 நாள்களுக்கு ரூ. 2,600 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.
விவசாயக் கூலி வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கும் குறைந்தபட்சம் ரூ. 300 முதல் ரூ. 500 வரை சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தூய்மைக் காவலர்களுக்கு ரூ. 100 சம்பளம் என்பது மிகவும் சொற்பமானது. இதன் மூலம் அரை வயிற்றுக்கான உணவுத் தேவையைக்கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு தூய்மைக் காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தூய்மைக் காவலர்கள் சிலர் கூறியதாவது: 
தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு ரூ. 2,600 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்தபோது நாளொன்றுக்கு ரூ.200 சம்பளம் வழங்கப்பட்டது. மாநில அரசின் கீழ் மாற்றப்பட்டு ஆண்டு முழுவதும் வேலையை வழங்கி சம்பளத்தைப் பாதியாகக்  குறைத்துவிட்டனர். இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்துக்கான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. 
ஊராட்சி வேலையை நம்பி வந்த எங்களுக்கு அரை வயிறு உணவுகூட கிடைக்க முடியாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது. குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் அனைத்தும் கேள்விக்குறியாகிறது. தினமும் கழிவுகளை அகற்றி கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்க உதவும் எங்களை அரசு கண்டுகொள்ளாமல் நிராகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை முகமை திட்ட இயக்குநர் ஜி.ரமேஷ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 
மாவட்டத்தில் 1,608 தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து உரக்குடில் மையங்களில் வழங்குவது மட்டுமே இவர்களது பணி. நாளொன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு வேறு வேலையும் வழங்க முடியாது.  இருந்தும் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்னையில் மாநில அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com