கரோனா பாதிப்பு எதிரொலி: தடை உத்தரவால் வெறிச்சோடிய பவானி!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பவானி நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கரோனா பாதிப்பு எதிரொலி: தடை உத்தரவால் வெறிச்சோடிய பவானி!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பவானி நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

சர்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இவ்வைரஸ் தாக்குதலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பரவாமல் தடுக்க கடந்த 22-ம் தேதி சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 24-ம் தேதி முதல் தமிழக அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது.

அத்யாவசியத் தேவைகளுக்கான மளிகை, பால், மருந்து, உணவு மற்றும் காய்கறிக் கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும். அத்யாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே பொதுமக்கள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பவானியிலிருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்குச் செல்லும் இரு பாலங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை கதவுகள் வழிபாடுகள் நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டதாலும், பக்தர்களும் வருவதில்லை. தேவாலயம், மசூதிகளிலும் வழிபாடுகள் இல்லை. பயணிகள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பேருந்து நிலையம் வெறிச்சோடியுள்ளது.

கைத்தறி ஜமக்காளக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. சாயத் தொழில்சாலைகள், நூற்பாலைகள் இயங்கவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பெருந்துறை தொழில்பேட்டைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேருந்துகளில் வேலைக்குச் சென்று வரும் நிலையில் தடை உத்தரவால் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பொதுமக்கள், தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாததால் ஈரோடு - மேட்டூர் சாலை, அந்தியூர் சாலை, சத்தி சாலை வெறிச்சோடியுள்ளது.  எப்போதும் மக்கள் நடமாட்டத்தால் களையுடன் காணப்படும் அந்தியூர் - மேட்டூர் பிரிவு களையிழந்துள்ளது. பரபரப்புடன் காணப்படும் பவானி - மேட்டூர் சாலையும், நொடிக்கொரு வாகனம் செல்லும் கோவை - சேலம் தேசியநெடுஞ்சாலையும் வெறிச்சோடியுள்ளது.

முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்குக்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட தகவல்களை கேட்டறிந்த இளைய தலைமுறையினர் தற்போது முதல்முறையாக நேரில் பார்ப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com