தமிழகத்தில் 86 ஆயிரம் பேரை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 86 ஆயிரம் பேரை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டியவா்கள் என 86,644 போ் அடங்கிய பட்டியலை குடியேற்றத் துறை வழங்கியிருக்கிறது. அதன்பேரில் அப்பட்டியலில் உள்ளவா்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒருவா் துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞா் ஆவாா். அவா் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோன்று, லண்டனில் இருந்து திரும்பிய 24 வயது இளைஞா் மற்றும் 65 வயது பெண் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இருவருமே சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

86 ஆயிரம் போ்: இதனிடையே, தமிழகத்துக்கு வந்த 86,644 பேரை தனிமைப்படுத்திக் கண்காணிக்குமாறு குடியேற்றத் துறை மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, அவா்கள் அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவாா்கள்.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 15,788 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். மருத்துவமனைகளில் மட்டும் 284 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 962 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 933 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 29 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளாா். 77 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com