ஈரோட்டில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தவிர 16,456 குடும்பங்களைச் சார்ந்த 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர் என அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர். ராஜா என்ற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், சு.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்டத்தில்; கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.  கடந்த 11 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து 7 நபர்கள் ஈரோட்டிற்கு வந்து சுல்தான்பேட்டை மசூதியில் தங்கியிருந்தனர். இந்த நபர்கள் 14 ஆம் தேதி முதல் கொல்லம் பாளையம் மசூதியில் தங்கியிருந்தனர்.

இதனையடுத்து அங்குத் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 நபர்கள் 16 ஆம் தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில் 2 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 82 நபர்கள் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதில் 28 ஆம் தேதி வரை 6 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று 4 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று மேலும் 10 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளைம் மற்றும் மாவட்டம் முழுவதும் 16,456 குடும்பங்கள் 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அவர்கள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

144 தடை உத்தரவு காலம் முடிவடையும் வரை அனைத்துத்துறை அலுவலர்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறையுடன் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நம்பிக்கையை அளித்திட வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை துறை சார்ந்த அலுவலர்கள் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதுபோன்ற தருணங்களில் அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பணியின் முக்கியத்துவம் கருதி பணியாற்றிட வேண்டும்.

மேலும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருவது பெருமையளிக்கிறது. அனைவரும் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றிட வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் அச்சம் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சௌண்டம்மாள், வருவாய்க் கோட்டாட்சியர்கள் பி.முருகேசன், சி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com