'கரோனா தடுப்பில் சித்த மருத்துவர்களை ஈடுபடுத்த வேண்டும்'

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்று சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனருமான மைக்கேல் செயராசு தெரிவித்துள்ளார்.
'கரோனா தடுப்பில் சித்த மருத்துவர்களை ஈடுபடுத்த வேண்டும்'

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்று சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனருமான மைக்கேல் செயராசு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உலகத் தமிழ் மருத்துவக் கழகம் நிறுவி, மூலிகைப் பண்ணை அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளர்த்துப் பராமரிப்பதுடன், பள்ளி, கல்லூரி, மாணவர்கள், மக்களுக்கும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

கரோனா நிலவரம் பற்றித் தினமணிக்கு அளித்த பேட்டி: 

கரோனா பீதியால் உலகம் பதைபதைப்புடன் உள்ள இந்த காலகட்டத்தில் சித்த மருத்துவத்தில் அதற்கு தீர்வு இருக்கிறதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது. சித்த மருத்துவத்தில் காய்ச்சல் 64 வகை எனச் சொல்லப்பட்டுள்ளது. உடலைக் காற்று, வெப்பம், நீர் ஆகியவை இயக்குகின்றன. 

இதனடிப்படையில்தான் நோய்கள் உருவாகின்றன. எனவே, சித்த மருத்துவத்தில் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது. தமிழ்நாட்டில் 2012 ஆம் ஆண்டில் டெங்கு நோயால் குழந்தைகள் உள்பட மடியும் நேரத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா துணிந்து நிலவேம்புக் குடிநீரை டெங்கு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரவாமல் இருக்க அனைத்து மக்களுக்கும் வழங்க உத்தரவிட்டார். நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு மட்டுமின்றி வேறு சில மூலிகைப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் கண்ணுசாமி என்பவர் எழுதியுள்ள சித்த மருத்துவம் குறித்த நூலில் பல ஜுரங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். 

அதனடிப்படையில் இன்று பரவி வரும் கரோனா ஜுரம் என்பது வாதகப ஜுரமாக அனுமானிக்கப்படுகிறது. நிலவேம்புக் குடிநீர் குறித்து சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி செய்து அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான தன்மை உள்ளது என்று அறிக்கை வழங்கியுள்ளனர். கிங்ஸ் இன்ஸ்டிடியூட் தலைவர் குணசேகரன் ஓர் நிகழ்ச்சியில் கூறும்போது, தில்லியில் நடைபெற்ற சுவாசத் தொற்று நோய் குறித்து கொடுக்கப்பட்ட அறிக்கையில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் சுவாசத் தொற்று நோய்த் தாக்கம் குறைவாக இருந்தது. அதற்கு மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கியதால் சுவாசத் தொற்று குறைந்தது என்று கூறியுள்ளார். சித்த மருத்துவம் என்பது ஆய்வின் அடிப்படையில்தான் இயங்குகிறது. 

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவேம்புக் குடிநீர் வழங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. தொந்த சுரக் குடிநீர், சர்வ சுரக் குடிநீர் ஆகியவற்றை அதிகம் நான் பயன்படுத்தி வருகிறேன். தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் பொடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலவேம்புக் குடிநீர் இல்லாதபட்சத்தில் துளசி, வேப்பிலை, மிளகு, வெற்றிலை சேர்த்துக் குடிநீர் செய்து பயன்படுத்தலாம். தற்போதைய சூழலில் தமிழக அரசு சித்த மருத்துவர்களுக்குத் தளம் அமைத்துத் தர வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சித்த மருத்துவர்கள் கண்காணிப்போடு நிலவேம்புக் குடிநீருடன் லிங்கம், தாளவாகம் உள்ளிட்ட மருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் நிலவேம்புக் குடிநீர் மூலம் தொற்று நோயைத் தடுத்ததை முன் மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டும் என்றார் மைக்கேல் செயராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com