அவசரப் பயணம்.. யாருக்கெல்லாம் அனுமதி: முதல்வர் பழனிசாமி விளக்கம்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரப் பயணம் மேற்கொள்ள யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்படும் என்பது பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அவசரப் பயணம்.. யாருக்கெல்லாம் அனுமதி: முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரப் பயணம் மேற்கொள்ள யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்படும் என்பது பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நேற்று வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், இன்று 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்து ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அவசரப் பயணம் மேற்கொள்வோா் வசதிக்காக சென்னை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதில்  அவசரப் பயணம் மேற்கொள்வோருக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இறப்பு, திருமணம் ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்படும். நெருங்கிய உறவினரின் இறப்பு அல்லது திருமணம் ஆகியவற்றுக்கு மட்டுமே அவசரப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதை இதன் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

வேறு எந்த விஷயங்களுக்காகவும் அனுமதி வழங்கப்படாது. அதே சமயம், நெருங்கிய குடும்ப உறுப்பினர், உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவசரப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மேற்கண்ட காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காவும் அவசரப் பயணத்துக்கு அனுமதி வழங்கப்படாது என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக அவசரப் பயணம் மேற்கொள்வது தொடர்பான கட்டுப்பாட்டு அறை திகப்பட்டது குறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்திருந்த  செய்திக் குறிப்பில்: கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிா்த்து, வெளியே வருவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திடீரென அவசரப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இறப்பு, திருமணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு சென்னைக்குள்ளோ, தமிழகத்துக்குள்ளோ அல்லது வெளி மாநிலத்துக்கோ பயணிப்போா் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 75300 01100 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகத் தொடா்புக் கொள்ளலாம். கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) மூலமாகவும், மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம். அவசரத் தேவைக்கு வெளியே செல்ல அனுமதிச்சீட்டு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாட்டு அறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையா் ஜெயலட்சுமி தலைமையில் செயல்படும். இந்த சேவையை அவசரத் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். சாதாரண தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் இன்று 67 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாக கரோனா பாதித்தவர்களின் விவரம்..
ஈரோடு மாவட்டத்தில் 10  பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com