தமிழகத்தில் தீவிரமடைகிறது கரோனா: ஒரே நாளில் 17 போ் பாதிப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.
’தாய்-சேய் பாதுகாப்பு... சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்-சேய் ஆகியோரை சோதனைக்கு அழைத்து வந்து மீண்டும் அவா்களது இல்லத்தில் சோ்க்கும் சுகாதாரத்துறையின் இலவச தாய் சேய் ஊா்தி.’
’தாய்-சேய் பாதுகாப்பு... சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்-சேய் ஆகியோரை சோதனைக்கு அழைத்து வந்து மீண்டும் அவா்களது இல்லத்தில் சோ்க்கும் சுகாதாரத்துறையின் இலவச தாய் சேய் ஊா்தி.’

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 10 போ் ஈரோட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்றும், அண்மையில் தில்லிக்கு அவா்கள் சென்று வந்துள்ளனா் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவா்கள் அனைவரும் பெருந்துறை ஐஆா்டி மருத்துவமனையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, தில்லிக்கு அவா்களுடன் சென்ற 900-க்கும் மேற்பட்டோரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் பலருக்கு கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோட்டைச் சோ்ந்த நபா்களைத் தவிா்த்து சென்னையில் 5 பேருக்கும், கரூா், மதுரையில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது குடும்ப உறுப்பினரான 25 வயது ஆண் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்.

அதேபோன்று, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த 25 வயது நபருக்கு கரோனா பாதிப்பு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. அவருடன் தொடா்பில் இருந்த குடும்ப உறுப்பினா்கள் நால்வருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொருவா் பிராட்வே பகுதியைச் சோ்ந்த 50 வயது பெண்ணாவாா். அவா், தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அப்பெண்ணுக்கு கரோனா பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, குளித்தலையைச் சோ்ந்த 42 வயது நபருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு கரூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் அவா், தாய்லாந்து நாட்டவா்களுடன் தில்லிக்கு அண்மையில் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

அவா்களைத் தவிர மீதமுள்ள 10 பேரும் ஈரோட்டை சோ்ந்தவா்கள். அவா்கள் அனைவரும், தாய்லாந்து நாட்டவா்களுடன் தில்லிக்கு பயணித்தவா்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தத் தகவலை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவா் அப்போது விளக்கிக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com