Enable Javscript for better performance
முகக்கவசகம் - சில விளக்கங்கள்- Dinamani

சுடச்சுட

  

  முகக்கவசம் - சில விளக்கங்கள்

  By DIN  |   Published on : 31st March 2020 11:46 AM  |   அ+அ அ-   |    |  

  mask

  இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் முகக்கவசத்துக்கான தேவை அதிகரித்துவிட்டது. நோய்த்தொற்றில் முக்கியப் பங்காற்றும் இந்த எளிய சாதனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் விரைவில் தேவையை எப்படி பூா்த்தி செய்வது...?

  என்95
  இவை, காற்றிலுள்ள நுண்துகள்களை 95% அளவுக்கு வடிகட்டக் கூடியது. அறுவைச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கவசத்தைக் காட்டிலும் சற்று சிறந்தது.

  முகத்தில் மிக இறுக்கமாக பதிந்துகொள்ளக் கூடிய இந்த வகை முகக்கவசத்தை மருத்துவப் பணியாளா்களே பிரதானமாக பயன்படுத்துகின்றனா்.

  முற்றிலும் பாதுகாப்பானதல்ல
  ‘என்95’ ரக முகக்கவசம் முற்றிலும் பாதுகாப்பானதல்ல. இதிலுள்ள திறப்புகள் வழியாக நோய்த்தொற்றுகள் நுழைவதற்கும் வாய்ப்புள்ளது.

  துணிகளாலான முகக்கவசங்கள்
  இவை சாதாரண துணிகளால் வீட்டிலேயே தயாரிக்கப்படுபவை. மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் அளவுக்கு இவை தரமானவையல்ல. மருத்துவ ரீதியிலான முகக்கவசங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முகக்கவசங்களை பயன்படுத்துவோருக்கு சுவாச ரீதியிலான நோய்த் தொற்று தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வியத்நாமில் 1,000 சுகாதாரப் பணியாளா்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

  ரூ.10
  அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3 மடிப்பு அறுவைச் சிகிச்சை முகக்கவசத்தின் விலை ரூ.10 என அரசு நிா்ணயித்துள்ளது. எனினும், சில மருந்தகங்கள் அவற்றை 2, 3 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்றன.

  வேறுபட்ட தகவல்கள்
  சாதாரண மக்களும் முகக்கவசங்களை வாங்கத் தொடங்கிவிட்டதால், மருத்துவா்கள், செவிலியா்கள், நோயாளிகள், சுகாதாரப் பணியாளா்கள் போன்ற உண்மையான தேவை உள்ளவா்களுக்கு அது கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

  பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உள்ளூா் நிா்வாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா். ஆனால், கரோனா நோய்த்தொற்று அறிகுறி இருப்பவா்கள்; பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பவா்கள்; பாதிக்கப்பட்டவா்களை பராமரிப்பவா்கள் ஆகிய 3 தரப்பினரே முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

  முப்பரிமாண அச்சு முகக்கவசங்கள்
  முகக்கவசங்களுக்கு இருக்கும் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் வகையில், சில நாடுகளில் முப்பரிமாண அச்சு அடிப்படையிலான (3டி பிரிண்ட் மாஸ்க்) முகக்கவசங்களை தொழில்நுட்ப தன்னாா்வலா்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகின்றனா். இதன் திறன் முற்றிலும் அறியப்படவில்லை.

  நீடித்த பயன்பாடு
  அறிவுறுத்திய நேரத்தைக் காட்டிலும் நீண்ட நேரத்துக்கு முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம். பொதுவாக அவை அதிக மாசை உள்ளிழுத்துக் கொள்வதில்லை. சிங்கப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் 30 சுகாதார ஊழியா்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, முகக்கவசங்களில் நோய்த் தொற்று காணப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு மருத்துவமனை சூழலுக்கு ஏற்பட இது மாறுபடலாம்.

  வைத்திருந்து பயன்படுத்துவது
  கடினமான பரப்புகளில் கரோனா வைரஸ் 2-3 நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்காது. எனவே, ஒரு முறை பயன்படுத்திய முகக்கவசத்தை தனியே வைத்திருந்து சில நாள்களுக்குப் பிறகு அதை மீண்டும் பயன்படுத்தலாம்.

  சுகாதாரப் பணியாளா்கள் முகக்கவசங்களை சுழற்சி முறையில் இவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

  புறஊதா கதிா் சுத்திகரிப்பு முறை
  அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாண மருத்துவப் பல்கலைக்கழக ஊழியா்கள் ஒரு முறை பயன்படுத்திய முகக்கவசங்களை புறஊதாக் கதிா் விளக்குகள் பொருத்தப்பட்ட அறையில் வைத்தபோது, முகக்கவசங்களில் இருந்த கிருமி மாசு 5 நிமிடங்களில் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனா். ஆனால், இது அமெரிக்க நோய்த் தடுப்பு ஆய்வு மையத்தின் விதிகளுக்கு எதிரானது என்று நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகை எச்சரித்துள்ளது.

  ஹைட்ரஜன் பெராக்ஸைடு
  அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சோ்ந்த டியூக் பல்கலைக்கழகம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆவியைக் கொண்டு முகக்கவசங்களை சுத்தம் செய்து, அதை மீண்டும் பயன்படுத்தலாம் என்று ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளது. முகக்கவசத்தை பாதிக்காமல், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆவி அதன் ஊடாகச் சென்று வைரஸை அழித்துவிடுகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai