
ஊரடங்கு உத்தரவால் சென்னை மாதவரத்தில் முடங்கியுள்ள சரக்கு லாரி ஓட்டுநா்கள், கிளீநா்களுக்கு திங்கள்கிழமை நோய்தொற்று உள்ளதா என கண்டறியும் சுகாதாரத்துறை ஊழியா்கள்.’
கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாதவரத்தில் உள்ள லாரிகள் நிறுத்துமிடத்தில் ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்களுக்கு மருத்துவப் பரிசோதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களில் உள்ள பொது இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைபடுத்தும் பணி , வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறியும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாதவரம் மண்டலத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் லாரிகள் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி சாா்பில் மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சென்னைக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் லாரிகளின் ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், 1 மீட்டா் இடைவெளியில் ஓட்டுனா்கள், கிளீனா்கள் அமர வைத்து பரிசோதிக்கப்பட்டனா்.
சந்தை இடமாற்றம்: சிந்தாதரிப்பேட்டையில் இயங்கி வரும் காய்கறிச் சந்தையில் திங்கள்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அந்தச் சந்தையை அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் மாற்றினா். அங்கு, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...