தளர்வுகள் பற்றி தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் விளக்கம்:

"கரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்க, 4.5.2020 முதல் ஊரடங்கை தொடர்ந்து அமுல்படுத்த தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து, முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி நோய் தடுப்பு பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. 

நோய் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார்போல தளர்வுகளை அனுமதித்துள்ளது. இதன்படி,சிகப்பு மாவட்ட பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

எனவே, நோய் தடுப்பு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிகப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில்அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின்படி ஏற்கனவே முதல்வரின் செய்தி வெளியீட்டில் தெரிவித்தபடி அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை. 

எனவே, இந்த தளர்வுகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com