ஒருபுறம் கரோனா உலகை அச்சுறுத்தி வந்தாலும், மறுபுறம் நமது விஞ்ஞானிகளின் கற்பனையைத் தட்டிவிட்டு பல நூதன கண்டுபிடிப்புகளை உருவாக்க வைத்துள்ளது. கவச உடைகள், செயலிகள், சமூக இடைவெளியை உறுதி செய்யும் கருவி போன்றவற்றை மாணவ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஒருசில மாதங்களில் விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய சாதனங்கள், தேவைக்கேற்ப மாற்றி வடிவமைத்த சாதனங்களில் சில...
புதிய அவதாரத்தில் டிரோன்
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்படுவதே முதல்கட்ட அறிகுறிகள். மக்களிடம் காய்ச்சலைக் கண்டறிவதற்கான பணியை எளிதாக்குவதற்காக, அகச்சிவப்பு கதிர்கள் மூலம் உடல் வெப்பநிலையை அளவிடவல்ல கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானத்தை (டிரோன்) குவாஹாட்டி ஐஐடி வடிவமைத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக கிருமிநாசினியைத் தெளிப்பதற்கும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊரடங்கை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்கும் நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிருமிகளை கொல்லும் கருவி
வெளியில் வாங்கி வரும் காய்கறிகள், பாக்கெட் பொருள்கள் உள்ளிட்டவற்றின் புறப்பரப்பிலும் பணம், நாணயங்கள் உள்ளிட்டவற்றிலும் கரோனா வைரஸ் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அவற்றைக் கொல்வதற்காக புறஊதாக் கதிர்களை வெளியிடும் பல்பு அடங்கிய பெட்டி வடிவிலான கருவியை ரோபார் ஐஐடி வடிவமைத்துள்ளது.
உபசரிக்கும் ரோபோக்கள்
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்காக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருந்துகள், உணவுகளை அளிப்பது, அவர்களின் அறையிலிருந்து குப்பைகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்கு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சுவாசக் குழாய் கருவி
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டால், அவரது மூச்சுக்குழல் வழியே குழாயை செலுத் வேண்டிவரும். அப்போது, நோயாளிக்கு ஏற்படும் இருமல் மூலம் கரோனா தீநுண்மி மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
அவ்வாறு வெளியேறும் தீநுண்மியைக் கட்டுப்படுத்துவதற்கான பெட்டி அளவிலான கருவியை குவாஹாட்டி ஐஐடி வடிவமைத்துள்ளது.
டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்
மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் கருவியை (இதயத் துடிப்பைக் கணக்கிடும் கருவி) மும்பை ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தக் கருவி மூலம் நோயாளியைத் தொடாமல் அவரது இதயத் துடிப்பைக் கேட்டு அதை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவும் முடியும்.
தனிமைப்படுத்துவதற்கான கவச உறை
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான கவசஉறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கவசஉறையினுள் விளக்கு, மேஜை விசிறி, புறஊதா விளக்கு உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படாது. அந்த நோயாளியிடமிருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பரவுவது தடுக்கப்படும்.
செயற்கை சுவாசக் கருவி
குறைந்த செலவிலான செயற்கை சுவாசக் கருவியை (வென்டிலேடர்) ரூர்கி மற்றும் கான்பூர் ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அந்தக் கருவியை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.
ஆக்ஸிஜன் கவசம் (பபுள் ஹெல்மெட்)
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் நோயாளிகளுக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிப்பதற்காக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் குழாய்க்கு மாற்றாக கவசம் போன்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் தலையிலிருந்து கழுத்து வரை இந்தக் கவசம் பொருத்தப்படும்.
திறன்மிகு குப்பைத் தொட்டி
மருத்துவமனைகள், பொது இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் உருவாகும் குப்பைகளை உரிய நேரத்தில் அகற்றும் நோக்கில் சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் திறன்மிகு குப்பைத் தொட்டியை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் குப்பைத் தொட்டியில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவை அறிதிறன்பேசி மூலம் கண்காணிக்க முடியும். அவ்வாறு கண்காணித்து, குப்பைத் தொட்டி நிரம்பி வழியும் முன்பே அதிலிருந்து குப்பைகளை அகற்றிவிட முடியும்.
தொகுப்பு: சுரேந்தர் ரவி
வடிவமைப்பு: சிலம்பரசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


