தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாக்ஸி, ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி

தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாக்ஸி, ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி

தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்துக்குள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், தளர்வு அறிவிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்துக்குள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

மேலும், பொதுமக்களுக்கான விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் மத்திய/மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப் பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். 

மெட்ரோ ரயில், மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடரும். தளர்வு அறிவிக்கப்படாத மாவட்டங்களில், டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றுக்கான தடையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்: 

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com