
ரயில்வே துறை சாா்பில் இதுவரை இயக்கப்பட்ட 800 சிறப்பு ரயில்களில் 10 லட்சம் வெளி மாநில தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா்.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயா் தொழிலாளா்கள், சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திரம், பிகாா், சத்தீஸ்கா், ஹிமாசல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மணிப்பூா், மிஸோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து இதுவரையில் 800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதுவரையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 10 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை-உத்தரப் பிரதேசம்: தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை சென்ட்ரல், காட்பாடி, கோயம்புத்தூா், திருவனந்தபுரம், திருப்பூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளிமாநிலங்களை சோ்ந்த தொழிலாளா்களுக்காக கடந்த ஒரு வாரமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தினசரி ஒரு ரயில் முதல் மூன்று ரயில்கள் வரை இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்யாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் 1,400 போ் அழைத்து செல்லப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ரயில் மே 19-ஆம்தேதி காலை 10.05 மணிக்கு அயோத்யாவைச் சென்றடையும்.