
முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நான்காவது கட்டமாக பொது முடக்கம் மே 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அந்தந்த மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் புதுச்சேரி அரசும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுச்சேரிக்குள் சமூக இடைவெளியுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த தளர்வுகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.