

பொதுமுடக்கத்துக்கு முன்னதாக கோயம்பேடு பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை, ஒரு நாள் கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஒப்பந்ததாரருக்கு, சிஎம்டிஏ அனுப்பிய கடிதத்தின் விவரம்: கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, அரசு பொதுமுடக்க உத்தரவு அறிவித்ததையொட்டி, கோயம்பேடு டாக்டா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூா் சென்ற பொதுமக்கள், தங்கள் வாகனங்களை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் விட்டுச் சென்றுள்ளனா்.
இவ்வாறு, சுமாா் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1,359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. தற்போது வாகனங்களைத் திரும்ப எடுக்கச் செல்லும் பொதுமக்களிடம், இந்த வாகனங்களுக்கு 55 நாள்களுக்கும் முழுநேர வாடகை கட்டணம் வசூலிப்பதாக கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, துணை முதல்வரின் அறிவுறுத்தலின் படி, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும், அவற்றுக்கு ‘ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்’. எனவே, பொதுமக்கள் ஒருநாளுக்குரிய கட்டணமாக, நான்கு சக்கர வாகனங்களுக்கு - ரூ.50, இரு சக்கர வாகனங்களுக்கு - ரூ.40 மற்றும் மிதிவண்டிகளுக்கு - ரூ.15 செலுத்தி, தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.