
காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் கருப்புப் பட்டையணிந்து செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்தனா்.
தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தும் விதமாக அவ்வாறு வந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஒப்பந்த செவிலியா்கள் சிலா் கூறியாவது: கடந்த 2015-ஆம் ஆண்டில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் வாயிலாக சுமாா் 10 ஆயிரம் செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டனா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவா்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், ஏறத்தாழ 5 ஆண்டுகளாகியும் அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடா்பாக உயா் நீதிமன்றம் உத்தரவு வெளியிட்டும் கூட, நிரந்தர ஊழியா்களுக்கு நிகரான ஊதியம் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே, எங்களது கோரிக்கையையும், ஆட்சேபத்தையும் அரசுக்கு தெரிவிக்கும் விதமாக கருப்புப் பட்டை அணிந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...