
இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 42.75% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று பிற்பகல் மத்திய சுகாதார அமைச்சகஅதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 42.75% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது வரை மொத்தமாக 67,691 பேர் குணமடைந்துள்ளனர். 86,110 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
முன்னதாக, நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,58,333ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,531 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.