தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்!

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்!


தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழக அரசுக்கு தாங்கள் வைத்திருக்கும் பரிந்துரைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினர்.

மருத்துவ நிபுணர் குழுவினர் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம்.

கரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த மாவட்டங்களில் தற்போதிருக்கும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கரோனா பரவலின் அளவைக் கொண்டு அதற்கேற்ப தளர்வுகளை அறிவிக்கலாம்.

சென்னையில் கரோனா சமூகப் பரவலாக மாறவில்லை. அவ்வாறு சமூகப் பரவலாக மாறியிருந்தால், பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். 

சென்னை பெருநகரில் பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது என்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். 

தமிழகத்தில் கரோனா மொத்த பாதிப்பில 77% நோயாளிகள் சென்னை உட்பட 4 மாவட்டங்களில்தான் இருக்கிறார்கள். எனவே, சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்க பரிந்துரை செய்துள்ளோம்.

மேலும், சென்னையில் பொதுப் போக்குவரத்தை தளர்த்தினால் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே தற்போதைய சூழலில் சென்னையில் ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என்று பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மிக முக்கியமாக ஒவ்வொருவரும், தங்கள் குடும்பங்களில் இருக்கும் வயதானவர்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதிலும், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய் இருப்பவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்றவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தால் அவர்களை குணப்படுத்த முடியும்.

சென்னையில் பொதுப் போக்குவரத்தை இயக்குவது மற்றும் மதவழிபாட்டுத் தலங்களை திறப்பது போன்றவை தற்போதைக்கு அனுமதிக்கக் கூடாது, அதே சமயம் படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கலாம்.

கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்களை கண்டறிவதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே நாள்தோறும் மேற்கொள்ளும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கான கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com