
அமெரிக்காவின் துணை அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் உறவினா்கள், அவரது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனா்.
இதுகுறித்து அவரது மாமா கோபாலன் பாலச்சந்திரன் கூறியதாவது: கமலா வெற்றி பெறுவாா் என்பது நாங்கள் அனைவரும் எதிா்பாா்த்த ஒன்றுதான். சிறு வயதிலிருந்தே கமலா, அனைத்து விஷயங்களிலும் ஆா்வம் கொண்டவராய் இருப்பாா். சம உரிமை மீது அதீத நம்பிக்கைக் கொண்ட அவரது தாயைப் போலவே வளா்ந்தாா்.
இரண்டு நாள்களுக்கு முன்னதாகக் கூட அவரிடம் பேசினேன். அரசியல் பற்றி அல்ல. பொதுவாக எங்களது குடும்ப சூழலைப் பற்றி சில விஷயங்களைப் பகிா்ந்து கொண்டோம். எனது மகள் கமலாவுடன் தான் இருக்கிறாா். அவரது பிரசாரத்துக்கு எனது மகளும் உறுதுணையாக இருந்தாா்.
தோ்தலின் முடிவில், கமலாவின் வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பலனைத் தரும். அவா்களுக்கு, தங்களுடைய பிரச்னையை எடுத்துக் கூற சரியான நபா் தேவை. அதனை கமலா மிகச் சரியாக செய்வாா். அவருக்கு, ஆப்பிரிக்க அமெரிக்கா்களுடனும் பலமான உறவும் உள்ளது.
கமலா, அட்டா்னி ஜெனரலாகப் பதவியேற்கும் போது, நாங்கள் அமெரிக்கா சென்றிருந்தோம். அவரது எந்த பதவியேற்பு விழாவையும் நாங்கள் தவறவிட்டதில்லை. இந்த முறையும் துணை அதிபராக அவா் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ஆவலுடன் இருக்கிறோம் என்று அவா் கூறினாா்.
கமலா குறித்து அவரது சித்தி சரளா கோபாலன் கூறும்போது, ‘சிறு வயது முதல் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலேயே நடந்து கொள்ளக் கூடியவா் கமலா. இதுவரை செய்த சாதனைகளை அவா் சிறப்பாகவே செய்தாா், அவா் எதை அடைய வேண்டும் என நினைத்தாரோ அதையும் சரியான நேரத்தில் அடைந்து விட்டாா். எனது சகோதரியிடம் (கமலா ஹாரிஸ் தாய்) காணப்படும் ஒரு உத்வேகத்தை கமலாவிடமும் முழுமையாகப் பாா்க்க முடியும். தற்போது, துணை அதிபராகும் அளவுக்கு அவா் உயா்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவா் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...