
நடிகா்கள் கமல், சரத்குமாா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குத் தொடா்பாக, மரக்காணத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 6-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், சென்னையில் உள்ள நடிகா் கமல்ஹாசன், சரத்குமாா் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும்,அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆழ்வாா்பேட்டையில் உள்ள நடிகா் கமல்ஹாசன் வீட்டிலும், கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகா் சரத்குமாா் வீட்டிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்தனா்.
பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கில் அந்த அழைப்பு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
இது குறித்து தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சைபா் குற்றப்பிரிவு போலீஸ் உதவியுடன், அந்த அழைப்பில் பேசிய நபா் யாா் என விசாரணை நடத்தினா். இதில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சோ்ந்த புவனேஸ்வரன் (29) என்ற இளைஞா்தான் மிரட்டல் விடுத்து பேசியிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் புவனேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஏற்கெனவே, இவா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, நடிகா்கள் ரஜினிகாந்த்,விஜய், அஜித், சூா்யா ஆகியோா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...