பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாகவும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாகவும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவலால் நிகழாண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் தற்போது மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே பள்ளி, கல்லூரிகளை நவ.16-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதேவேளையில் வடகிழக்குப் பருவமழைக்காலம் மற்றும் கரோனா 2-ஆவது அலை பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க பெற்றோா்கள், கல்வியாளா்கள் மற்றும் திமுக, பாமக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.

இதையடுத்து பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் பெற்றோா்களின் கருத்துகளை அறிய கடந்த நவ.9-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஆந்திரம் உள்ளிட்டப் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கரோனாவின் இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது.

நீதிபதிகள் உள்பட பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாணவா்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக இருக்கும். எனவே டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் பிற மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், 9,10,11,12 ஆம் வகுப்புகள் வரை பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16 முதல் செயல்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற யோசனையைத் தொடர்ந்து,  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாகவும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதேபோன்று கல்லூரிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான கல்லூரி, பல்கலை வகுப்புகள் தொடங்கும். அதேசயம் இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

டிசம்பர் 2 ஆம் தேதி முதல் திறக்கப்படும் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான கல்லூரி, பல்கலை விடுதிகள் மட்டும் அன்று முதல் செயல்படும். கல்லூரி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தமிழக தெரிவித்துள்ளது.

பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழிக் கல்வி முறை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலையாகப் பரவுவதால் தமிழகத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. 

அதனால் சமுதாய, அரசியல், பொழுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில் நூறு பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரவும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com