சென்னையில் மூவர் சுட்டுக் கொலை: கொலையாளிகளை காரில் துரத்திச் சென்று பிடித்த காவலர்கள்

கொலையாளிகளை, காவலர்கள் காரில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர் என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.
சென்னையில் மூவர் சுட்டுக் கொலை: கொலையாளிகளை காரில் துரத்திச் சென்று பிடித்த காவலர்கள்
சென்னையில் மூவர் சுட்டுக் கொலை: கொலையாளிகளை காரில் துரத்திச் சென்று பிடித்த காவலர்கள்

சென்னை: சென்னை யானைகவுனியில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளிகளை, காவலர்கள் காரில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர் என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மகேஷ்குமார் அகர்வால், சென்னையிலிருந்து தனிப்படையினர் தேடி வருகிறார்கள் என்று தெரிந்ததும், கொலையாளிகள் மகாராடிர மாநிலம் சோலாப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை சென்னை காவல்துறை தனிப்படையினர் காரில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.

முக்கியக் குற்றவாளிகளான கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம்கமலை கைது செய்த தனிப்படையினர், மேலும் மூன்று பேரைத் தேடி வருகிறார்கள்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சீத்தல் - கொலையாளி  ஜெயமாலா இடையே குடும்பப் பிரச்னை இருந்துள்ளது.

கொலையாளிகளைப் பிடிக்க ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில காவல்துறையினரும் உதவி செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவத்தில் ஜெயமாலாவின் உறவினர்கள் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர். கொலையான மூன்று பேரை 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். 

கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அது தமிழகத்தைச் சேர்ந்தது கிடையாது. மராட்டியத்தில் இருந்து கொண்டு வந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை. இந்த கொலை வழக்கில், கொலை நடந்த வீட்டில் இருந்து லாக்கர் ஒன்று காணாமல் போனதாக புகார் வந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

செளகாா்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் சீத்தல் ஆகியோா், புதன்கிழமை மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து காவல்துறையினா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சீத்தலின் மனைவியின் சகோதரா்கள் இதைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:  கருத்து வேறுபாடு காரணமாக சீத்தல் அவரது மனைவி ஜெயமாலா இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இந்த நிலையில் ஜெயமாலாவின் சகோதரா்கள் கைலாஷ், விகாஷ் இருவரும் சென்னை வந்து, தனது தங்கை மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு உரிய வழியை சொல்லுமாறு சீத்தல் மற்றும் அவரது தந்தை தலில் சந்திடம் கேட்டுள்ளனா். அப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைலாஷ், விகாஷ் இருவரும் கோபமாக வெளியேறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கொலைகளில் விகாஷ், கைலாஷ் இருவருக்கும் நேரடித் தொடா்பு உள்ளதா? அல்லது கூலிப்படையை வைத்து கொலை செய்தாா்களா? உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

கொலையாளிகள் தப்பி விட்டாா்களா  என்பதை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,  எழும்பூா் ரயில் நிலையம், சென்னை விமான நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு  செய்தனர். அதில் அவர்கள் சென்னையிலிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

ஜெயமாலாவின் சகோதரா்கள் கைலாஷ், விகாஷ் ஆகியோருடன் தலில் சந்த் வீட்டுக்கு சிலா் வந்து செல்லும் விடியோ காட்சிகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் நடவடிக்கையை துரிதப்படுத்திய காவல்துறை, கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட 5 தனிப்படைகளில் ஒரு தனிப்படை மகாராஷ்டிரம் மாநிலம் விரைந்தது. தப்பிச் செல்ல முயன்ற  முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com