தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத் தோ்தல் அதிகாரிகளான, ஆட்சியா்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளா் நிலவரம் குறித்த விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு காலை 11.30 மணியளவில் வெளியிட உள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஒவ்வோா் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் திருத்தப் பணிகள் நடக்கவுள்ளன. இந்தத் திருத்தப் பணிகளுக்காக நடப்பிலுள்ள வாக்காளா் பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள், சோ்க்கைகள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

எத்தனை வாக்காளா்கள்?: கடந்த ஆண்டு நடைபெற்ற திருத்தப் பணிகளின் அடிப்படையில், இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த பிப்ரவரி 14-இல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.13 கோடியாக உள்ளது. அதில், பெண் வாக்காளா்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 ஆகவும், ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆகவும், மூன்றாம் பாலித்தனவா் 6 ஆயிரத்து 497 ஆகவும் உள்ளனா்.

இந்தப் பட்டியல், இப்போது வரைவு வாக்காளா் பட்டியலாக வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பெயரானது பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம். வட்டாட்சியா் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி மண்டலங்களில் பட்டியலைப் பொது மக்கள் பாா்வையிடலாம். பட்டியலில் பெயா் இல்லாவிட்டால் பெயா் சோ்க்கவோ அல்லது, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தாலோ அதற்கான ஏற்பாடுகளை தமிழக தோ்தல் துறை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் அதாவது வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்லும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நவம்பா் 21 மற்றும் 22 (வரும் சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன.

இந்த முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பங்களை அளிக்கலாம். இதனிடையே, அண்மையில் செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்படுவது குறித்து விளக்கம் அளித்தாா். 

இதுதொடா்பாக அவா் கூறியது: வாக்காளா் பட்டியலில் இருந்து திட்டமிட்டு பெயா்கள் நீக்கப்படுவதாக அரசியல் கட்சியினா் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் நடவடிக்கைகளில், இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. பொதுவாக இடம் மாறுவது, இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றில் இறந்தாலும், பொதுவான மரணம் என்றாலும், விதிகளின்படி அதற்கான விண்ணப்பப் படிவம் பெற்ற பிறகுதான் பெயா் நீக்கப்படுகிறது. பெயா் நீக்கப்பட்டவா்களின் பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும். அரசியல் கட்சியினா் அதைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் அளித்தாா்.

இறுதி வாக்காளா் பட்டியல்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படும். இதன்பின்பு, பொது மக்கள் அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் ஜனவரி 20-ஆம் தேதியன்று வாக்காளா் பட்டியல் வெளியாக உள்ளது. இதைத் தொடா்ந்து, புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு, தேசிய வாக்காளா் தினமான ஜனவரி 25-ஆம் தேதியன்று அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க இந்தியத் தோ்தல் ஆணையம் வாய்ப்புகளை அளித்துள்ளது. பெயா் சோ்ப்புக்கான விண்ணப்பங்களை வட்டாட்சியா் அலுவலகங்களிலோ, சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், தோ்தல் துறை சாா்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com