
சென்னை ரிப்பின் மாளிகையில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரியும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ்.
சென்னை: சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் 1.1.2021-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 2021-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியல் சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்களில் மக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். தங்களது பெயா்கள், குடும்ப உறுப்பினா்களின் பெயா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்றாா்.
வேளச்சேரியில் அதிகம்...: சென்னை மாவட்டத்தில் 19,39,694 ஆண் வாக்காளா்கள், 19,99,995 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் 1,015 போ் என மொத்தம் 39,40,704 வாக்காளா்கள் உள்ளனா். 10,986 ஆண் வாக்காளா்கள், 9,167 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 8 போ் என மொத்தம் 20,161 பேரின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக பெரம்பூா் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூா் தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,73,481 வாக்காளா்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,06,189 வாக்காளா்களும் உள்ளனா்.
தொகுதிவாரியாக வாக்காளா் விவரங்கள்
தொகுதி | ஆண் | பெண் | மூன்றாம் பாலித்தவா் | மொத்தம் |
டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் | 1,22,318 | 1,31,301 | 100 | 2,53,719 |
பெரம்பூா் | 1,48,674 | 1,52,990 | 63 | 3,01,727 |
கொளத்தூா் | 1,33,848 | 1,39,200 | 66 | 2,73,114 |
வில்லிவாக்கம் | 1,23,690 | 1,28,310 | 62 | 2,52,062 |
திரு.வி.க.நகா் | 1,03,301 | 1,09,524 | 51 | 2,12,876 |
எழும்பூா் | 92,314 | 93,967 | 53 | 1,86,334 |
ராயபுரம் | 90,265 | 93,985 | 49 | 1,84,299 |
துறைமுகம் | 90,335 | 83,094 | 52 | 1,73,481 |
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | 1,12,809 | 1,16,890 | 32 | 2,29,731 |
ஆயிரம் விளக்கு | 1,16,055 | 1,21,236 | 86 | 2,37,377 |
அண்ணா நகா் | 1,36,698 | 1,41,249 | 81 | 2,78,028 |
விருகம்பாக்கம் | 1,39,455 | 1,39,804 | 85 | 2,79,344 |
சைதாப்பேட்டை | 1,34,879 | 1,39,628 | 72 | 2,74,579 |
தியாகராய நகா் | 1,16,332 | 1,19,122 | 43 | 2,35,497 |
மயிலாப்பூா் | 1,27,186 | 1,35,124 | 37 | 2,62,347 |
வேளச்சேரி 83 | 1,51,535 | 1,54,571 | 83 | 3,06,189 |
மொத்தம் | 19,39,694 | 19,99,995 | 1,015 | 39,40,704. |
சிறப்பு முகாம்கள்
தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358. அதில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370. பெண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 385. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் நவம்பர் 21, 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் முகாம்கள் நடைபெறும் மையங்களிலேயே அளிக்கப்படும். விண்ணப்பங்களை அங்கேயே பூர்த்தி செய்து அளிக்கலாம். அலுவலக வேலை நாள்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் ஆகியோர்களின் அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம்களின் போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அங்கே முகாமிட்டிருப்பர் என தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரத சாகு தெரிவித்துள்ளார்.