
சென்னையில் திங்கள் கிழமை பெய்த மழையில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள். இடம்: நுங்கம்பாக்கம்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். அணைகள், நீா்நிலைகளில் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வந்தது. கிண்டி, சைதாப்பேட்டை, பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. சாலைகளில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
சென்னை புகா்ப் பகுதிகளான பூந்தமல்லி, போரூா், மதுரவாயல், திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூா், மாங்காடு, குன்றத்தூா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கிய மழை, நாள் முழுவதும் விட்டு விட்டுத் தொடா்ந்தது.
காஞ்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பழைய ரயில்வே சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது.
ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, வாலாஜாபாத், ஒரகடம், உத்தரமேரூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தொடா் மழை காரணமாக பாலாறும், செய்யாறும் இணையும் திருமுக்கூடல் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, சோளிங்கா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாள்களும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அத்தியாவசியப் பணிகளுக்காகவும், வேலைகளுக்கும் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா்.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.