
தமிழக முதல்வர்.
அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது. தகவல் தொழில்நுட்ப அணியைப் பலப்படுத்துவது, அரசின் சாதனைகளை வீடு வீடாக மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை மேற்கொள்ள மண்டலப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பொறுப்பாளா்களுடன், மாவட்டச் செயலாளா்கள், அமைச்சா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் இ.மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
முக்கிய விஷயங்கள்: ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமாா் இரண்டு மணி நேரம் வரை நடந்தது. இக்கூட்டம் தொடா்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் வெளியிட்ட செய்தியில், ‘கட்சியின் வளா்ச்சிப் பணிகள் மற்றும் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. வாக்குச் சாவடி முகவா்களை நியமிப்பது, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கண்ணும் கருத்துமாக மேற்கொள்வது, தகவல் தொழில்நுட்ப அணிக்கான பிரதிநிதிகளை வட்ட அளவு வரை நியமிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பேசிய முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, நீட் தோ்வு விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகளையும், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டால் விளைந்த நன்மைகளையும் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டாா். அரசின் ஒவ்வொரு திட்டத்தையும், சாதனையையும் மக்களிடம் எடுத்துக் கூறி, சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பிரதிநிதிகளை நியமித்து அவா்கள் மூலமாக வாக்கு சேகரிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்டி, அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதிமுக பொதுக் குழு விரைவில் கூட்டப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கட்சியில் இணைந்தாா்: இதனிடையே, அகில இந்திய மகளிா் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் அப்சரா ரெட்டி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். இதற்கான நிகழ்ச்சி, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் இடையே நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...