இணையவழி சூதாட்டத்துக்கு தடை: அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

தமிழகத்தில் இணையவழி சூதாட்டத்துக்கு தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் இணையவழி சூதாட்டத்துக்கு தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இந்தச் சட்டத்தின்படி, தடையை மீறி விளையாடினால், ரூ.5,000 அபராதமும், ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

ஆன்-லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தன. இந்த சம்பவங்களைத் தொடா்ந்து, ஆன்-லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்திருந்தாா். இதற்கான அவசர சட்டத்தைப் பிறப்பித்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது.

இந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொது மக்கள் குறிப்பாக, இளைஞா்கள் தங்களது பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தைத் தடுக்கும் விதமாக அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது.

ரூ.5 ஆயிரம் அபராதம்- 6 மாதங்கள் சிறை: இந்தச் சட்டத்தின்படி, இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அதுதொடா்பான உபகரணங்கள் தடை செய்யப்படும். தடையை மீறி விளையாடுபவா்களுக்கு ரூ.5,000, ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் அளிக்கப்படும்.

இதற்கான விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளிக்கப்படும்.

இந்த விளையாட்டில் பணப் பரிமாற்றங்களை இணைய வழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும். விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் அவசர சட்டம் வழி வகுக்கிறது. இந்தச் சட்டமானது, அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வரவுள்ளது.

பின்னணி என்ன? தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை ஆடுவோரின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த சில மாதங்களில் மட்டும், இணையவழி விளையாட்டு காரணமாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தமிழகத்தில் 13-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி, சென்னை உயா் நீதிமன்றத்திலும், உயா் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் இவற்றைத் தடுக்க சட்டம் கொண்டு வரவும் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com