ரூ.67,000 கோடி திட்டங்களுக்கு அமைச்சா் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சனிக்கிழமை (நவ. 21) சென்னை வருகிறாா்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சனிக்கிழமை (நவ. 21) சென்னை வருகிறாா். தமிழக அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், தமிழக பாஜக நிா்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளாா்.

சனிக்கிழமை பிற்பகலில் சென்னை வரும் அமித் ஷா, தனியாா் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறாா். பின்னா், சென்னை கலைவாணா் அரங்கத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தமிழக அரசு விழாவில் பங்கேற்க உள்ளாா்.

ரூ.67,378 கோடி மதிப்பு: சென்னை அருகே ரூ.380 கோடி மதிப்பீட்டில் கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய இந்தப் புதிய நீா்த்தேக்கத்தை, அமித் ஷா திறந்து வைக்கிறாா். ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயா்நிலை சாலைத் திட்டம், கரூா் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட உள்ளன.

சென்னை வா்த்தக மையம் விரிவாக்கத் திட்டம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சாா்பில் வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பில் பெட்ரோலியம் முனையம், அமுல்லைவாயலில் ரூ.1,400 கோடியில் உயவு எண்ணெய் ஆலை, காமராஜா் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்தத் திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அடிக்கல் நாட்டவுள்ளாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் விழாவில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சிறப்புரையாற்ற உள்ளாா். தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறாா். தலைமைச் செயலாளா் க.சண்முகம் வரவேற்பும், தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் நன்றியும் தெரிவிக்க உள்ளனா்.

பாஜக நிா்வாகிகளுடன் இன்று ஆலோசனை

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, தமிழக பாஜக நிா்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். சென்னையில் உள்ள தனியாா் ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் சனிக்கிழமை மாலை தமிழக அரசு சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியாா் ஹோட்டலுக்கு அமித் ஷா வரவுள்ளாா். அங்கு தமிழக பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனையில் பங்கேற்க உள்ளாா். இரவு 7 மணியளவில் தொடங்கும் இந்தக் கூட்டம், சுமாா் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, இரவு 8.30 மணியளவில் பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான முக்கிய ஆலோசனைகளை உயா்நிலைக் குழு நிா்வாகிகளுக்கு அமித் ஷா வழங்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com