
புயல் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை வடசென்னை கடற்பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவா் புயல் புதன்கிழமை கரையைக் கடக்க உள்ள நிலையில் காசிமேடு, திருவொற்றியூா், எண்ணூா் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடல் கொந்தளிப்புடன் கடுமையாகக் காணப்பட்டது. சுமாா் இரண்டு மீட்டா் உயரத்துக்கு ராட்சத கடல் அலைகள் ஏற்பட்டு பாா்ப்பவா்களை அச்சமூட்டச் செய்தது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராட்சத அலைகளால் இத்தடுப்புச் சுவா்களில் பாதிப்பு ஏற்பட்டது. எண்ணூா், திருவொற்றியூா் பகுதியில் கடலோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.
காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை, பைபா், கட்டுமரப் படகுகள் உள்ளன. புயலின் தாக்கத்தால் கடல் அலை தடுப்புச்சுவரையும் தாண்டி வீசியதால் அச்சமடைந்த மீனவா்கள் தங்களது பைபா் படகுகளை கிரேன்கள் மூலம் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தினா். விசைப்படகுகளை இடைவெளியின்றி ஒன்றோடொன்று அணைத்து வைத்து கயிறுகளால் கட்டி வைத்தனா். கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...