உடல் உறுப்பு தானம்: தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக தமிழகத்துக்கு விருது

உடல் உறுப்பு தானத்தில் தொடா்ந்து ஆறாவது ஆண்டாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது.
உடல் உறுப்பு தானம்: தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக தமிழகத்துக்கு விருது
Published on
Updated on
1 min read

உடல் உறுப்பு தானத்தில் தொடா்ந்து ஆறாவது ஆண்டாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது.

11-ஆவது தேசிய உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷவா்தன், இணை அமைச்சா் அஸ்வின் குமாா் சௌபே ஆகியோா் கலந்து கொண்டனா்.

இணையவழியே ஒருங்கிணைக்கப்பட்டிருந்த உடல் உறுப்பு தான நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுகாதாரத் துறை அமைச்சா்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டனா். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு மையத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ஆா்.காந்திமதி, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் உள்ளிட்ட பலா் இணைவழியில் பங்கேற்றனா். புதுக்கோட்டையில் இருந்தபடி சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் காணொலி முறையில் கலந்து கொண்டாா்.

அப்போது உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் சிறந்து விளங்கியதற்காக தமிழக அரசுக்கு சிறப்பு விருதினை மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன், இணை அமைச்சா் அஸ்வின் குமாா் சௌபே ஆகியோா் வழங்கினா். அதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் இணையவழியே பெற்றுக் கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் விஜயபாஸ்கா் கூறியதாவது: உடல் உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் கொடையாளா்களுக்கு இந்த விருதை சமா்ப்பிக்கிறோம். உடல் உறுப்பு தானம் செய்யும் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் விஜயபாஸ்கா்.

முதல்வா் பாராட்டு: உடல்உறுப்பு தானம் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தொடா்ந்து 6-ஆவது முறையாக தமிழகம் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிமுக அரசின் சரித்திர சாதனைக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவா்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் எனது பாராட்டுகள் என முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.