புரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள்

போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை 3-ஆவது வாரத்தை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது.
முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள்
முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள்
Updated on
1 min read

போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை 3-ஆவது வாரத்தை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு  போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் 3ஆவது வாரம் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே பங்கேற்று வழிபட்டனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெருமாளை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டுமே மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலும் மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டதால் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளையே நேரில் தரிசிக்கும் நன்மை கிடைக்கும் எனப் பக்தர்கள் தெரிவித்தனர். சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி வழிபட்டனர்.

முன்னதாக ஸ்ரீநிவாசபெருமாளுக்கு 16 வகை பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், 9 வகை தீபாரதனையும் செய்யப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். போடி நகர் காவல் துறையினர் கோவிலில் முகாமிட்டு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்களை கோவிலுக்கு வெளியிலிருந்தே வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பினர். இதனால் போடி திருவள்ளுவர் சிலை வரை வரிசையில் பக்தர்கள் நின்றனர்.

இதேபோல் போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயர் சுவாமி திருக்கோவில், போடி போஸ் பஜார் ஸ்ரீ ராமர் கோவில், மேலச்சொக்கநாதபுரம் ஸ்ரீ தொட்டராயர் சுவாமி திருக்கோவில், தேவாரம் ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோவில்,  சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் புரட்டாசி 3 ஆவது வாரச் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

போடி வினோபாஜி காலனி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணன் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 ஆவது வாரத்தையொட்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அர்ச்சகர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com