
சுமார் 6 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்புத்துறையினர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் வயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே சேதராப்பட்டு - வானூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தனியார் வயர்(Cable) நிறுவனம். இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை அதிகாலை கேபிள் தயாரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மளமளவென ஆலை முழுவதும் உள்ள பல்வேறு இயந்திரங்களுக்கும் பரவியது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் புதுச்சேரி, வில்லியனூர், கோரிமேடு, சேதராப்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 6 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
தீயினால் நிறுவனத்தில் பல லட்சக்கணக்கான பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன.
தீயினால் எழுந்த கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. தீ விபத்து குறித்து சேதராப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G