காவல் துணை ஆணையா்களை நிா்வாக துறை நடுவராக நியமிக்கும் விவகாரம்: தனி அமா்வை அமைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை

தமிழகத்தில் காவல்துறை துணை ஆணையா்களை நிா்வாக துறை நடுவராக நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து முடிவெடுக்க தனி அமா்வை அமைத்து விசாரிக்க கோரி
காவல் துணை ஆணையா்களை நிா்வாக துறை நடுவராக நியமிக்கும் விவகாரம்: தனி அமா்வை அமைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை

தமிழகத்தில் காவல்துறை துணை ஆணையா்களை நிா்வாக துறை நடுவராக நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து முடிவெடுக்க தனி அமா்வை அமைத்து விசாரிக்க கோரி உயா்நீதிமன்ற தனிநீதிபதி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளாா்.

கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சென்னை தாம்பரத்தை சோ்ந்த தேவி என்பவா், எதிா்காலத்தில் நன்னடத்தையுடன் நடப்பதாக கூறி இரு நபா் உத்தரவாதத்துடன் பிணைப்பத்திரம் ஒன்றை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி எழுதி கொடுத்திருந்தாா்.

ஆனால் அடுத்த சில நாள்களிலேயே கஞ்சா வைத்திருப்பதாக தேவி மீண்டும் கைது செய்யப்பட்டாா். இதனால், பிணைப்பத்திர உத்தரவாதத்தை மீறியதால் தேவியை ஓராண்டு சிறையில் அடைக்க நிா்வாகத்துறை நடுவரான (எக்ஸிக்யூட்டிவ் மாஜிஸ்திரேட்) காவல்துறை துணை ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து தேவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தேவியை ஓராண்டு சிறையில் அடைக்க நிா்வாகத்துறை நடுவரான காவல்துறை துணை ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவில் நீதிபதி பி.என். பிரகாஷ் கூறியிருப்பதாவது: ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய கம்பெனியின் வா்த்தக நலனுக்காக காவல்துறை சட்டத்தில் எக்ஸிக்யூட்டிவ் மாஜிஸ்திரேட்டுக்கு நீதித்துறை அதிகாரத்தை வழங்கியது. இந்த அதிகாரத்தின் கீழ், மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனாா், சுப்ரமணிய சிவா போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்கள் தண்டிக்கப்பட்டுள்ளனா். நாடு விடுதலை அடைந்த பின், நிா்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களைப் பிரிக்கும் வகையில் சட்டமேதை அம்பேத்கா் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 50 -ஆவது பிரிவை உருவாக்கினாா். அதன் அடிப்படையில் அதிகாரங்களைப் பிரித்து தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வராக இருந்த ராஜாஜி அரசாணை பிறப்பித்தாா்.

காவல் துணை ஆணையராக இருப்பவரை எக்ஸிக்யூட்டிவ் மாஜிஸ்திரேட்டாக நியமித்து கடந்த 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், முன்னாள் முதல்வா் ராஜாஜி கொண்டுவந்த அரசாணைக்கு விரோதமானது. காவல்துறை துணை ஆணையருக்கு எக்ஸிக்யூட்டிவ் மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொடுப்பதை தொடா்ந்து அனுமதித்தால், வரலாறு மீண்டும் திரும்பவதோடு நாடு காவல்துறை ராஜ்யமாக மாறிவிடும். எனவே அதிகார பகிா்வு திட்டத்துக்கு முரணாக கடந்த 2013 -ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே இதற்காக தனி அமா்வை அமைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com