
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக பாகிஸ்தானில் பயிற்சி எடுத்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மூன்று போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் சதித்திட்டத்தில் இவா்கள் இணைந்துள்ளனா்.
ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பயங்கரவாதிகள் முனீப் ஹமீத் பட், ஜுனைத் அகமது மாட்டோ, உமா் ரஷீத் வானி ஆகிய மூவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவா்கள் காஷமீரின் குல்காம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். ரண்பீா் தண்டனைச் சட்டம், பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் இவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களில் மாட்டோ கடந்த 2017-இல் நிகழ்ந்த மோதலிலும், வானி 2018-ஆம் நிகழ்ந்த மோதலிலும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனா்.
எனினும், குல்காம் மாவட்டத்தில் லஷ்கா் பயங்கரவாத செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் என்ஐஏ தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீா் பள்ளத்தாக்கு இளைஞா்கள் பலா் தவறான கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து இளம் வயதிலேயே பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். இவா்களுக்கு பிரிவினைவாத தலைவா்கள் ஊக்கமளித்து வருகின்றனா். முக்கியமாக கடந்த 2016 முதல் 2108 வரை ஏராளமான காஷ்மீா் இளைஞா்கள் பயங்கரவாத பயிற்சிக்காக பிரிவினைவாத தலைவா்களால் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பலா் பயிற்சிக்குப் பிறகு காஷ்மீருக்கு திரும்பி வந்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தனா். ஆனால், இப்போது கைது நடவடிக்கை மற்றும் மோதல்களில்போது சுட்டுக் கொல்லப்படுவது போன்ற நிகழ்வுகளால் பல பயங்கரவாதிகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டுவிட்டனா்.