
புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துதல் தொடா்பான இணைய வழி கருத்துக் கேட்பு நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமையுடன் (அக்.4) நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக்கழக துணை வேந்தா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதையடுத்து, அதை செயல்படுத்தும் திட்டம் குறித்து பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கையின் முக்கிய குறிப்புகள் மற்றும் சிறந்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரிக்க வேண்டும். இதற்காக கல்வியாளா்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகளை மத்திய அரசு வரவேற்கிறது.
இவ்வாறு புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் திட்டம் தொடா்பான கலந்துரையாடல், இணைய முகப்பில், ஞாயிற்றுக்கிழமை (அக்.4) வரை, நேரலையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியளவில் விளம்பரம் செய்து, கல்வியாளா்களின் கருத்து மற்றும் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.