கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்குவதற்கு அரசின் தவறான அணுகுமுறையே காரணம்: டிஎன்சிஎஸ்சி

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேங்குவதற்கு அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என டிஎன்சிஎஸ்சி பணியாளர் சங்கம் கூறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நன்னிலம்: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேங்குவதற்கு அரசின் தவறான அணுகுமுறையே காரணம். எனவே, முறையான நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டுமென டிஎன்சிஎஸ்சி பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதனை அரிசியாக்கி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு மையங்கள் போன்ற இடங்களிலிருந்து, வெளி மாவட்டங்களுக்கு ரயில் மார்க்கமாகவும், லாரிகள் மூலமும் போக்குவரத்து இயக்கம் மேற்கொள்ளப்படும்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அனைத்து ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட்டு, மார்ச் மாதம் முதல் ஒரு தனியார் நிறுவனத்திடம் மட்டும் ஒப்பந்தம் மேற்கொண்டு, தமிழகம் முழுவதும் இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த நிறுவனத்திற்கு ஒரு லாரி கூட சொந்தமாக கிடையாது. அதேபோல மனித ஆற்றலும் கிடையாது.

மேலும், தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து இயக்கத்திற்கான ஒப்பந்தத்தில் பழைய ஒப்பந்தப்புள்ளியை விட 30% கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பல மாவட்டங்களில் அந்த தனியார் நிறுவனத்திற்கு பிரதிநிதிகளே கிடையாது. இதன்காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து துரிதமாக இயக்கம் மேற்கொள்ள முடியாததன் காரணமாக, நெல் மூட்டைகள் தேங்கி, விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனால் விவசாயிகள் பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலையிலும், ஆங்காங்கே பெய்கின்ற மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு சேதம் உருவாகின்ற நிலையும் உள்ளது. இதுபோன்ற நிலையினை தமிழக அரசும், நுகர்பொருள் வாணிபக் கழகமும் கருத்தில் கொண்டு, கொள்முதல் பணி பாதிக்காத வண்ணம் இருந்திடவும், துரித இயக்கம் மேற்கொள்ளவும், நெல்கொள்முதல் தொய்வின்றி நடைபெறவும் தனி ஒரு ஒப்பந்தக்காரரிடம் போடப்பட்டுள்ள, போக்குவரத்து இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய நடைமுறையில், அந்தந்த மாவட்டங்களிலேயே போக்குவரத்து ஒப்பந்தக்காரர்களை, ஒப்பந்தம் செய்து நெல் கொள்முதலில் தொய்வு ஏற்படாமலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com