கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படாத இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம்
கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படாத இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம்

இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டியை ஏமாற்றி நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டியை ஏமாற்றி அவரிடமிருந்து நகையைப் பறித்துக்கொண்டு மாயமான மற்றொரு மாற்றுத்திறனாளியைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
Published on

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டியை ஏமாற்றி அவரிடமிருந்து நகையைப் பறித்துக்கொண்டு மாயமான மற்றொரு மாற்றுத்திறனாளியைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி அமிர்தம்(60), மாற்றுத்திறனாளியான இவர் மாதந்தோறும் அரசின் உதவித் தொகையாக ரூ.1000 பெற்று வருகிறார். இந் நிலையில் அமிர்தம் இளையான்குடியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு அடையாளம் தெரியாத ஆண் மாற்றுத்திறனாளி ஒருவர் அமிர்தத்திடம் அரசின் உதவித்தொகை ரூ 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பம் கொடுங்கள் எனக்  கூறியுள்ளார்.

இவரது பேச்சை நம்பிய அவர் தகவல் தெரிவித்த மாற்றுத்திறனாளியை உடன் கூட்டிக்கொண்டு இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அங்குச் சென்றவுடன் அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி அமிர்தத்திடம் கழுத்தில் நகையுடன் சென்று விண்ணப்பம் கொடுத்தால் நிராகரித்து விடுவார்கள். நகையைக் கழட்டி கையில் வைத்திருக்கும் பையில் வையுங்கள் எனக் கூறியுள்ளார். 

பின்னர் இவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கழட்டி பையில் வைத்து அதை அந்த அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளியிடம் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார். அலுவலகத்தில் அவர் விண்ணப்பம் கொடுத்தபோது அரசு உதவித்தொகை எதுவும் உயர்த்தப்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பின் அலுவலகத்துக்கு வெளியே வந்த அமிர்தம் அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளியைத் தேடினார். ஆனால் அவர் நகையுடன் மாயமானார். அலுவலகத்துக்குள்ளும் வெளியிலும் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் அந்த மூதாட்டியை ஏமாற்றி நகையைப் பறித்துச் சென்ற நபரை அடையாளம் காணமுடியவில்லை. 

புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. மேற்கண்ட நகை பறிப்புச் சம்பவம் குறித்து அமிர்தம் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிந்து நகையுடன் மாயமான அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளியைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com