
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக, மேலும் 11 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 20 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 22 பேரை கைது செய்தனா்.
இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே, கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. செப்டம்பா் மாதத்துக்கு பின்னா் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் , சிபிசிஐடி விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதைத்தொடா்ந்து தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக 15 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனா். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்த வழக்குத் தொடா்பாக மேலும் 11 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். கைது செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் குருப்-4, குரூப் -2 தோ்வு முறைகேடுகளில் தொடா்புடையவா்கள் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக்கு பின்னா்,11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...